யோகி அரசை’ கடுமையாக சாடும் பிராமண அமைப்புகள்!

479

லக்னோ (15 ஜூலை 2020): காலம்காலமாக உத்தரபிரதேசத்தின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் பிராமணர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆனால் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக, உ.பியில் ஆட்சி அமைத்ததிலிருந்து, பிராமணர்கள் உ.பியில் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், அது தனது செல்வாக்கை இழந்து வருவதாகவும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

விகாஸ் துபே என்பவர் உ.பி.- இ ல் மிகப்பெரும் தாதாவாக செயல்பட்டு வந்தார். எட்டு காவலர்களை கொலை செய்த இவர் மீது கடும் ஆத்திரத்திலிருந்த காவல் துறையினர் விகாஸ் துபேயை பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையை தொடங்கினர். கடந்த ஜுலை 9 ம் தேதி மத்திய பிரதேசத்தில் வைத்து விகாஸ் துபேயை போலீஸ் கைது செய்தது. ஆனால் அதே வேகத்தில் விகாஸ் துபே தப்பியோட முயற்சி செய்ததாக கூறி போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.

தற்போது பிராமணரான பிரபல ரவுடி, விகாஸ் துபே’ போலீஸரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இது பிராமணர்களுக்கு மேலும் ஆத்திரத்தை கூட்டியுள்ளது.

‘அவர் ஒரு குற்றவாளி’ என்று ஒப்புக் கொண்டாலும், துபே கொல்லப்பட்ட விதம் தொடர்பாக பல பிராமண அமைப்புகள் இப்போது மாநிலம் முழுவதும் ஆயுதம் ஏந்தியுள்ளன.

‘நாங்கள் அனைவரும் விகாஸ் துபேவை ஒரு குற்றவாளியாக கருதுகிறோம், ஆனால் அவர் செய்த குற்றங்களுக்காக அவரை தண்டிக்கும் முறை சரியாக இல்லை. திரைப்பட காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாத முறையில் அவர் கொல்லப்பட்டார், ‘என்று அகில் பாரதிய பிராமண சங்கதன் மகாசங் (அகில இந்திய பிராமண கூட்டமைப்பு) தலைவர் அசீம் பாண்டே கூறினார்.

துபேயின் குடும்பத்தை மாநில நிர்வாகம் இப்போது மோசமாக நடத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
‘அவரது குடும்பத்தினர் நடத்தப்படும் விதம் மிகவும் தவறானது. விகாஸ் ஒரு குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஏன் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள்?’என்று கேள்வி எழுப்புகின்றார் பாண்டே.

இதைப் படிச்சீங்களா?:  சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு - மோகன் பகவத்துக்கு அச்சம் - ராகுல் காந்தி விளாசல்!

‘ஒரு பிராமணரிடம் கடுமையாக நடப்பது போன்று சத்திரியரிடமோ அல்லது வேறு சில உயர் சாதியினரிடமோ அரசாங்கம் நடக்கிறதா? இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பிராமணர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.’ என்றும் அசீம் பாண்டே குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேபோன்று, அகில் பாரதிய பிராமண மகாசபாவின் தலைவர் ராஜேந்திர நாத் திரிபாதி, துபேயின் கொலை ‘அரசியலமைப்பின் கொலை’ என்று கூறுகின்றார்.

‘எந்தவொரு தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை,’ என்று திரிபாதி கூறினார்.

பிராமணர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்

அசீம் பாண்டே கூற்றுப்படி, முந்தைய அரசாங்கங்களின் கீழ் பிராமணர்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் நடந்தன, ஆனால் ‘இந்த அரசாங்கத்தின் கீழ் இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது’.
ஜூன்-ஜூலை மாத கடைசி 11 நாட்களில் குறைந்தது 23 பிராமணர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் 2017 -இல் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அமைக்கப்பட்ட உடனேயே, ஐந்து பிராமணர்கள் உஞ்சாரில் உயிருடன் எரிக்கப்பட்டனர்,’என்று கூறுகின்றார் பாண்டே!

பல பிராமண அமைப்புகளால் பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்ட பின்னரே, இந்த வழக்கில் முறையான விசாரணையின் அவசியத்தை யோகி அரசாங்கம் ஒப்புக் கொண்டது என்றும் அசீம் பாண்டே தெரிவித்துள்ளார்.

தகவல் : திபிரிண்ட்
தமிழாக்கம் : இஸ்தப்ரக்