சீன ஒப்பந்தம் ரத்து – பீகார் அரசு அதிரடி உத்தரவு!

Share this News:

பாட்னா(29 ஜூன் 2020): சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பீகார் மாநில அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.

எல்லையில் வாலாட்டிக்கொண்டிருக்கும் சீன ராணுவம், சமீபத்தில் பெரும் மோதலை நடத்தியது. 20 இந்திய வீரர்கள் இறந்தனர்; பதிலடியில் 30 சீன ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்தது. இதனையடுத்து, சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் சிலர் நோ சீனா பொருட்கள் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும், ‘நோ சீனா பொருட்கள்’ என்ற கோஷம் கிளம்பி பரவி வருகிறது. மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சீன பொருட்களை குறைக்க துவங்கி விட்டனர். இதற்கிடையே, பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை-19 இணைக்கும் வகையிலும் 4 வழிப்பாலம் கட்ட பீகார் மாநில அரசு முடிவு செய்தது. இதில், ஒரு ரயில்வே மேம்பாலம், 4 சிறிய பாலங்கள், 13 சாலைகளை இணைக்கும் பாலம், பேருந்துகள் நிறுத்தும் 5 நிறுத்தங்கள் என மிகப்பெரிய திட்டமாக இருந்தது. இந்த பாலம் ஏறக்குறைய 5.63 கி.மீ தொலைவு கொண்டதாக ரூ.2,900 கோடி திட்ட மதிப்பில் வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெண்டர் அடிப்படையில் இரு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்காக பீகார் அரசு தேர்வு செய்திருந்தது. திட்டத்தை நிறைவேற்ற சீன நிறுவனங்களுடன் இரு நிறுவனங்கள் இணைந்து முடிவு செய்தது. இந்நிலையில், பீகாரில் பாலம் கட்ட இரு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.2,900 கோடி ஒப்பந்தத்தை பீகார் மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனைபோல், மகாராஷ்டிரா அரசு, சீன நிறுவனங்களுடன் ரூ.5,000 கோடியில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பீகார் மாநில சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் கூறுகையில், பாட்னாவில் கங்கை நிதியின் குறுக்கே 5 கி.மீ தொலைவுக்கு பாலம் கட்ட ரூ.2900 கோடி ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தோம். அந்த இரு நிறுவனங்களும் சீனாவின் ‛சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி, ‛ஷான்க்ஸி ரோட் பிரிட்ஜ் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருந்தன. நாங்கள் இந்த இரு சீன நிறுவனங்கள் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த கோரினோம். அதற்கு அந்த இரு நிறுவனங்களும் மறுத்ததால், ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். மீண்டும் புதிதாக டெண்டர் விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.


Share this News: