பண மோசடி செய்தவர்களை மறைத்தது ஏன்? பாஜகவின் கூட்டாளிகள் என்பதாலா? – ராகுல் காந்தி விளாசல்!

Share this News:

புதுடெல்லி (29 ஏப் 2020): நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து ராகுல் காந்தி பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் இது தெரிய வந்துள்ளது.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு முன்பு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதி மந்திரி அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. இந்த உண்மையை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?
இவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு ரூ. 6 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


Share this News: