எதையும் மறைக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

201

சேலம் (11 ஜூன் 2020): கொரோனா மரணம் குறித்த தகவல்கள் எதையும் அரசு மறைக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 19,333 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்” என்றார்.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

மேலும் “சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்க பல்வேறு பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

முன்னதாக சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.