கொரோனா நிவாரணத்துக்கான மான்யங்கள் பெறுவதில் சங்க பரிவார என்.ஜி.ஓ.-க்களுக்கும் முன்னுரிமை!

220

புதுடெல்லி (13 ஜூலை 2020):கடந்த ஐந்து மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கோவிட்19 கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் மிக வேகமாகப் பரவி உக்கிரத்தைக் காட்டி வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவர அந்ததந்த மாநிலங்களில் குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து உள்துறைச் செயலரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் நிவாரணப் பணிகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்பின் கீழ் வரும் என்.ஜி.ஓ.-க்கள் அனைவரும் உள்துறைச் செயலரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவால் மேற்பார்வையிடப்படுகின்றனர்.

இத்தகைய அதிமுக்கியமான அரசுசார் நிவாரணக் குழுவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ராஷ்ட்ரீய சேவா பாரதி எனும் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் கீழ் வரும் ஏறக்குறைய 743 என்.ஜி.ஓ.- அமைப்புக்கள் இடம் பெற்றுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் நாடும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. இவையனைத்தும் கல்வி,சுகாதாரம் மற்றும் ஏனைய மக்கள் சேவைப் பணிகள் சார்ந்த துறைகளின் கீழ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்பட்டு வரும், அரசின் இந்த மிக முக்கிய நிவாரண அமைப்பில் ஏறக்குறைய 94,662 என்.ஜி.ஓ.-க்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

இதன் மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் உணவு-தானிய பற்றாக்குறையின்போது அமைக்கப்பட்ட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இந்த ஆர்.எஸ.எஸ். சேவா பாரதி என்.ஜி.ஓ.-க்களும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.ஒரு குறிப்பிட்ட வகுப்புவாத அமைப்பு எவ்வாறு சேவை அடிப்படையில் செயல்பட முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் அச்சமாக எழுந்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  அண்ணாவே சொல்லிவிட்டார் - ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ!

இப்படியான சந்தேகமும் அச்சமும் நியாயமானதுதானா..?

ஆம், என்கிறது கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் ஆர்.எஸ்.எஸ். மீதான ஒரு குற்றச்சாட்டு! அப்போது பொதுமக்கள் மற்றும் தன்னார்வல சேவை நிறுவனங்களிடமிருந்து அரசாங்க தொகுப்பில் சேமிக்கப்பட்ட உணவு தானியங்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார் என்.ஜி.ஓ.-க்கள் மான்யமாகப் பெற்று அதனை ‘மோடி பை’ எனும் தமது திட்டமாக மாற்றி தமது சொந்த உதவியாக, பா.ஜ.க.-வினரின் குடும்பங்களுக்கு வழங்கியதாக பகிரங்கமாகவே அப்போது குற்றஞ்சாட்டினார் அவர்.

ஏற்கனவே, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போன்ற சேவை நோக்கத்துக்காக காவல் துறையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய அதிமுக்கிய அரசாங்க அமைப்புக்களில் சேவா பாரதி போன்ற ஆர.எஸ்.எஸ். சார்பு மனிதர்கள் தங்களை இணைத்துக் கொண்டதன் விளைவை நாடே அறியும். இந்நிலையில் உதவிக்கான அம்சங்களும் இவ்வாறு துவேஷ சார்பு நிலை கொண்டால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்னாவது என்பதுதான் பொதுமக்களின் உண்மையான கவலை..!

-இளவேனில்