அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை தொடர்ந்து, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை கோரியிருந்தது. இதன் மீது நடந்த விசாரணையில், கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு வெளியிட்டார்.

இந்த நிலையில், அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு வருகிற புதன்கிழமை (21-ந்தேதி) பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர். அவருக்கு, இருதயத்தில் செல்ல கூடிய 3 ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமலாக்க துறையினரின் விசாரணை ஒரு புறம் நடைபெற உள்ள சூழலில், மறுபுறம் அவருக்கு அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி உடல்நிலை பற்றிய காவேரி மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இஎஸ்ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் செந்தில் பாலாஜி உடல்நிலை பற்றி அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர். மருத்துவர்கள் தரும் தகவலையடுத்து செந்தில்பாலாஜியிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாட் நியூஸ்: