மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்!

Share this News:

மதுரை (03 மே 2020): மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் கைபேசி மூலமாகவே இன்று நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளை பெறலாம் என்று மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை காமராசர் சாலை, வெங்கடபதி அய்யங்கார் தெரு, பழைய குயவர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு விலையில்லா இலவச அரிசி,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52 -வது வார்டு செயலாளர் அரியனாச்சி ராமலிங்கம் ஏற்பாட்டில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் ஆர்வமிகுதியால் மக்கள் வெளியே வருவதை தடுக்க காவல் துறையினர் தகுந்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் கைபேசி மூலமாகவே நாளை ( இன்று ) நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளை பெறலாம்.

மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளிலும் அ.தி.மு.க.நிர்வாகிகள் ஏழை ,எளிய மக்களுக்கு விலையில்லா இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக நாளை ( இன்று ) முதல் தங்கு தடையின்றி ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் வழங்கபடும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில மாணவரணி இணை செயலாளர் பி.குமார் மற்றும் ஸ்ரீ ரங்கராந் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Share this News: