எந்த புதுமண தம்பதிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது!

Share this News:

சேலம் (26 மே 2020): புதுமணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் திருமணம் முடிந்த உடனே தம்பதிகள் இருவரும் தனிமைப் படுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கும், திருப்பூரில் வேலை பார்த்து வந்த பையனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், நேற்று முன் தினம் ( மே 24) நடக்க இருந்தது.

இருவரும், கெங்கவல்லி வந்து சேர்ந்தனர். கொரோனா பரவல் காரணமாக, மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்லும்போது கொரோனா சோதனை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மணப்பெண் குடும்பம், இரண்டு மாவட்டங்களை கடந்த போது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்று முடிவுகள் வெளியான நிலையில், சேலம் மாவட்ட எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சேலம் கலெக்டரின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, நேற்று முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி, எளிமையான முறையில், அவருக்கு திருமணம் நடந்தது. சில மணி நேரத்தில், மணப்பெண், மாப்பிள்ளையை, சுகாதார அதிகாரிகள் வீட்டில் தனிமைப்படுத்தினர். திருமணத்தில் பங்கேற்றவர்களையும் தனிமைப்படுத்தி, அவரவர் வீடுகளில், ‘நோட்டீஸ்’ ஒட்டினர். திருமணம் நடந்த வீடு, தெரு, கிராம பகுதியில், நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

‘புதுமண தம்பதி, திருமணத்தில் பங்கேற்ற குடும்பத்தினர், உறவினர் உள்பட, 12 பேர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணப்பெண்ணுக்கு, ‘கொரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்பெண்ணுக்கு, வேறு நோய் அறிகுறி இல்லாததால், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அப்பெண், உறவினர், மணமகன் வீட்டினருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, கடந்த, 23 முதலே வழங்கப்பட்டது. மணமக்கள் வீட்டினர் கேட்டுக்கொண்டதால், கலெக்டர் அனுமதியுடன் திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டது. திருமணம் முடிந்ததால், மணமக்கள், அவர்களது குடும்பத்தினர், 28 நாள், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share this News: