கொரோனா நன்கொடை தொகைகளை மறைக்கிறதா? தமிழக அரசு – சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்!

சென்னை (26 ஜூன் 2020): கொரோனாவிற்காக கிடைக்கும் நன்கொடை விவரங்களை விரைவில் தமிழக அரசு இணையத்தில் வெளியிடும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தகவல்களை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்றும், எவ்வளவு நன்கொடை வந்துள்ளது என்று வெளிப்படையாக கூறவேண்டும் எனவும் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கிடைக்கும் நன்கொடை விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அளிக்கப்படும் நிதியை முழுவதுமாக அரசு கணக்கிட்டு வருகிறது. இதனை இணையதளத்தில் பதிவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10 லட்சம் ரூபாய்க்கு மேலாக நன்கொடை அளித்தவர்கள் முதல்வரின் சார்பில் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்பட்டதாகவும், தற்போது பல்வேறு வழிமுறைகளில் காசோலை மட்டுமில்லாமல் வங்கியில் இருந்து நேரடி பண பரிமாற்றம், கூகுள் பிளே மூலமாக பலவகைகளில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதால் அனைத்தையும் தொகுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலைச்சர் நிவாரண நிதிக்கு கிடைக்கும் பணத்தை மாநில பேரிடர் மேலாண்மைக்கு மாற்றம் செய்து அதன் மூலமாக பொதுசுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கானது வருகின்ற திங்கட்கிழமை அன்று மீண்டும் விவாதிக்கப்படும் என்று வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: