தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை (20 மே 2020): தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறக்‍கப்பட்டவுடன் தேர்வை நடத்தப்போவதாக அறிவித்திருக்‍கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக பள்ளிகளுக்‍கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டு, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத நிலையில், அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில், சில தனியார் பள்ளிகள், பள்ளிகள் திறக்கப்பட்டதும், தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்குவதாக அறிவித்திருப்பது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளின் இந்த செயல், தமிழக அரசு அறிவிப்புக்‍கு முரணாக இருப்பதால் பெற்றோர்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்‍குநரகம் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்‍கையில், அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  அமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்!

பள்ளிகளை மீண்டும் திறந்ததும், ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் வந்துள்ளது – இது தமிழக அரசின் ஆணையை மீறிய செயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.

இதனிடையே, 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்‍கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்‍கு வர வேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக்‍கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்‍காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே மே 26 முதல் பணிக்‍குத் திரும்ப வேண்டும் – அவர்கள் பணியில் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.