புதைக்கப்படும் சமூகமும் – நீதிமன்ற சாமரமும்

1651

850 சாட்சிகள், 7,000க்கும் அதிகமான ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் எனப் பல்லாயிர ஆதாரங்கள் இருந்தும், ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் நடந்த வழக்கில், அயோத்தியில் இந்துத்துவ கும்பல்களால் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் யாருமே குற்றவாளிகள் அல்ல என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது!

பாபர் மசூதியை இடித்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது உயிருடன் உள்ள 32 பேரில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி உட்பட பலர் பாஜக மூத்த தலைவர்கள். செப்டெம்பர் 30, 2020 புதன்கிழமையன்று நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வாசித்தது. 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தவர்கள் அடையாளம் தெரியாத “சமூக விரோதிகள்” என்றும் அச்செயல திட்டமிடட்டு நடத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில மணி நேரங்களில் நடத்தி முடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித தகர்ப்பு நிகழ்வு, நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்டு, காவல்துறையின் எதிர்ப்பு இன்றி அவர்களின் ஒத்துழைப்புடன் பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்றது என்பதற்கு நம்பகமான பல நேரடி சாட்சியங்கள் இருக்கும்போதே இப்படி ஒரு தீர்ப்பு!

இது ஒரு “திட்டமிட்ட செயல்”, “அதிர்ச்சிகரமான சட்டவிதி மீறல்” என்று இந்திய உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டுதான் ஒப்புக் கொண்டது. ஆயினும் குற்றவாளிகள் தப்பிவிட்டனர். இது இந்திய நீதித்துறை சீரழிந்துவிட்டதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. கூச்சமின்றி துணிவுடன் புகும் அரசியல் தலையீடு, பலவீனமாக்கப்படும் திறன், குறைவான நிதியுதவி போன்றவற்றுக்கு உட்பட்டுவரும் நீதித்துறை சீர்செய்ய முடியாத நிலையை எட்டிவிட்டதாகவே பலர் அஞ்சுகின்றனர்.

இத்தீர்ப்பு இந்தியாவின் 200 மில்லியன் முஸ்லிம்களை நிர்க்கதியாக்கியுள்ளது. நரேந்திர மோடியின் இந்துத்துவ பாஜக அரசாங்கம் அச்சமூகத்தை ஒரு மூலைக்குத் தள்ளியுள்ளது. 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று போற்றப்படும் பன்மைத்துவ, மதச்சார்பற்ற இந்தியாவில், முன்னெப்போதும் இல்லாத அளவில் அச்சமூகம் அவமானப்பட்டு நிற்கிறது.

மாட்டை முன்னிறுத்தி அரசியலாக்கி அதன் மூலம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகளை விரைவாகக் கண்டுபிடிப்பதற்கான சட்டத் திருத்தம் என்று கூறி அதன் மூலம் முஸ்லிம்கள் வஞ்சகம் இழைக்கப்படுகின்றனர். முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து அதன் அரசியலமைப்பு சுயாட்சி பறிப்பு என மோடி அரசாங்கத்தின் பல கொடுமைகள் முஸ்லிம்களைக் குறிவைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பல நாடுகளில் கொரோனா பரவி அவை பலத்த பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில், இந்தியாவிலும் அது பெரிய அளவில் பரவக்கூடும் என்று ஜனவரியிலேயே எச்சரிக்கப்பட்டும், மோடி அரசின் மெத்தனப்போக்கால் கொரோனா பரவலில் இந்தியா இன்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த முதல் கட்டத்தில், தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் டெல்லியில் நடந்த தங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதையடுத்து, கொரோனா வைரஸை அவர்கள்தான் பரப்பினார்கள் என்று ஒரு வதந்தியைப் பரப்பி, மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், அதே காலகட்டத்தில், பெரிய அளவிலான இந்து மதக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் நடைபெற்றிருந்தபோதும் அவை கொரோனா பரவலுக்கான காரணமாகப் பார்க்கப்படவில்லை. அவற்றை ஊடகங்கள் குறை சொல்லவில்லை; எதிர்க்கவில்லை.

டெல்லியில் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பாஜகவினர்தான் கலவரத்தை தூண்டினார்கள் என்ற ஆதாரம் இருந்தபோதும் முஸ்லீம் மாணவர்களும் ஆர்வலர்களும்தாம் கலவரத்தைத் தூண்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டு ஏராளமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கலவரத்தைத் தூண்டிய இந்துத்துவவாதிகளோ சுதந்திரமாகத் திரிகின்றனர்.

ஆகவே, முஸ்லிம்களை அந்நியப்படுத்த, நசுக்க அவர்கள் மேற்கொள்ளும் செயல்திட்டங்களின் தொடர்ச்சியே இத்தீர்ப்பு என்றுதான் பல முஸ்லிம்கள் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரபலச் செய்தி ஊடகங்களும் மிக வெளிப்படையாகவே அபாண்டமான முறையில் முஸ்லிம்களை குற்றவாளியாகச் சித்தரிக்கின்றன. ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆதரவாக நின்ற சக்திவாய்ந்த பிராந்தியக் கட்சிகள் பலவும் கூட இன்று முஸ்லிம்களைக் கைவிட்டு விட்டதாகவே தெரிகிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் சரிந்து வருகிறது.

“முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்த அமைப்புகளின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் ஊடகங்கள் தங்களைக் கைவிட்டதாக உணர்கிறார்கள். சமூகத்தில் மிகுந்த விரக்தி நிலவுகிறது” என்று டெல்லியைச் சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையத்தின் அசிம் அலி கூறுகிறார்.

உண்மையாகப் பார்க்கப் போனால், இந்தியாவில் முஸ்லிம்களை ஓரங்கட்டிய வரலாறு நீளமானது. ஒருபக்கம் அவர்கள் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். மறுபக்கம் அவர்கள் ‘சலுகை அளிக்கப்படுகிறார்கள்’ என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். இவ்விதம் அவர்கள் இரட்டைச் சுமையை சுமக்கிறார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

முஸ்லிம்களுக்கு நியாயமற்ற முறையில் வெகுமதி அளிக்கப்படுகிறது என்ற இந்துத்துவவாதிகளின் பொய் பரப்புரைக்கு பல இந்தியர்கள் மயங்கிவிட்டபோதும், முஸ்லிம் சமூகம் அவ்விதமாக எந்த ஆதாயங்களிலிருந்தும் பயனடையவில்லை என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு அவர்களுக்குரிய விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 14%க்கும் அதிகமானவர்களாக இருந்தும் 2016ஆம் ஆண்டு மத்திய காவல்படை அதிகாரிகள் பிரிவில் அவர்களின பங்கு 3%க்கும் குறைவே.

இந்தியாவின் நகர்ப்புற முஸ்லிம்களில் 8% பேருக்கு மட்டுமே சரியான ஊதியத்துடன் கூடிய பணி அமைந்துள்ளது. அது தேசிய சராசரியை விட இரண்டு மடங்குக்கும்மேல் குறைவு என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய முஸ்லிம்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். அதற்கு மேலும் வீசப்பட்ட சாமரமே பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கின் இத்தீர்ப்பு. Is