பிரபல நடிகை வீட்டில் கொள்ளை – தனுஷ் என்பவர் கைது

சென்னை (19 ஜன 2022): பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடித்த தனுஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப்பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும், கடந்த ஜனவரி 11ஆம் தேதி தனுஷ் சில பொருள்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து வீட்டில் சோதனை நடத்தியதில் விலை உயர்ந்த கேமரா, 40 ஆயிரம் ரூபாய் உள்பட சில பொருள்கள் காணவில்லை. எனவே தனுஷிடம் விசாரணை நடத்தி திருட்டுப்போன பொருள், பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் தனுஷின் அம்மா நாகவல்லி, சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக்கொடுத்தார். அதில் தன்னுடைய மகனைக் காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதனால் இரண்டு புகார்கள் மீதும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, தனுஷ் திருப்பூரில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்குச் சென்ற காவல்துறையினர் தனுஷைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருடியதும் அதை கோவையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தனுஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹாட் நியூஸ்: