எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 14 – வீடியோ!

Share this News:



240p Mobile Version For Download Click Here

அலெப்போ அரண்மனையில் எர்துருலைக் கொலை செய்ய முயன்று பிடிபட்ட டெம்ப்ளரிடம் அமைச்சர் சஹாபுத்தீன் துக்ருல் விசாரணை நடத்துகிறார். அரண்மனையினுள் டெம்ப்ளர்களுக்கு உதவுபவர்கள் யார் என்று அவர் கேட்கும் கேள்விக்கு, சஹாபுத்தீன் துக்ருல் தான் என டெம்பளர் பதில் சொல்கிறான். இதனைக் கேட்டு அலெப்போ அமீர் குழப்பமடைகிறார்.

டெம்ப்ளர்களின் கோட்டையில் இளவரசி எலனோரா தமது தந்தைக்கு என்ன ஆனது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார். தம் தந்தையின் உடன் இருந்த மரியோவிடம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு மடக்குகிறார். ஆனால், மரியோ பிடி கொடுக்காமல் தமக்கு எதுவுமே தெரியாது எனக் கூறிவிடுகிறார். மரியோ பொய்ச் சொல்வதாக கூறி எலனோரா கோபத்தில் செல்கிறார். மரியோவுக்கு வருத்தம் ஏற்படுகிறது.

அலெப்போ செல்லும் வழியில் ஓய்வெடுக்க தங்கிய இடத்தில் எர்துருலின் ஆல்ப்கள் தமக்குள் பேசிக்கொள்கின்றனர். எர்துருல் ஹலிமாவை நேசிப்பது குறித்து பாம்ஸிக்கு ஆச்சரியம். அது குறித்து துர்குட்டிடம் விளக்கம் கேட்கிறார். உலகையே நாம் அடக்கிவிட்டதாக நினைத்தாலும் இரு கண்கள் நம்மை வீழ்த்திவிடும்; அது உனக்கும் நடக்கும்போது புரியுமென துர்குட் விளக்கமளிக்கிறார். எர்துருலுக்கு ஹலிமாவை விருப்பம் எனில் அவர் தந்தையிடம் பெண் கேட்க வேண்டியதுதானே; அவர் சம்மதிக்கவில்லையேல் ஹலிமாவைக் கடத்துவோம் என பாம்ஸி வெகுளியாக கூறுகிறார்.

அலெப்போவில் அமைச்சர் சஹாபுத்தீன் இப்னு அரபியிடம் தம் கவலைகளைத் தெரிவிக்கிறார். முஸ்லிம் உலகில் கவர்னர்கள் கொல்லப்படுவதும் தம் அரண்மனையினுள்ளேயே நடக்கும் சம்பவங்களால் விரக்தியில் உள்ளதாகவும் தம் பணியினை விட்டு முழுமையாக ஆன்மீகத்தில் ஈடுபட விரும்புவதாகவும் கூறுகிறார். இறைவன் படைப்பில் ஒவ்வொருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட ஒரு பணி உள்ளது. அந்தப் பணியினைச் சரிவர செய்வதுதான் அவரவரின் கடமை. உங்கள் கடமையினை விட்டு நீங்கள் விலகிச் செல்ல எண்ணுகிறீர்களா? உங்களைப் போன்றோரின் தேவை இஸ்லாமிய உலகுக்குத் தேவை. செய்யும் பணியிலேயே திருப்தி கொள்ளுங்கள் என இப்னு அரபி அவருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

பாக்தாதில் மரவேலை செய்யும் ஒரு நபரின் ஆசையினை சலாஹுத்தீன் அய்யூபி வந்து நிறைவேற்றிய விவரத்தைக் கூறி, அவரவர் கடமையினைச் சரிவர ஒவ்வொருவரும் நிறைவேற்றிச் சென்றால் இலட்சியத்தை அடையும் ஒருவரின் கையில் வெற்றி நிச்சயம். அதற்காக, இடையூறுகளையும் நம் சொந்தக் கவலைகளையும் பொருட்டாக கருதாது நாம் அனைவரும் நம் கடமைகளில் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார்.

எர்துருலைக் கொலை செய்ய முயன்ற டெம்ப்ளருக்கு உணவு கொண்டு வரும் பணிப்பெண், விசாரணையிலிருந்து தப்ப அவனுக்கு தம் தலைமுடியில் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்துக் கொடுக்கிறாள். அலெப்போ தளபதி நாசிரிடம் டெம்ப்ளர் மாஸ்டர் ஆஸம், அலெப்போ அமீர் எழுதுவது போன்று எப்படி கடிதம் எழுதவேண்டுமெனவும் ஜெரூசலேமைப் பிடிக்க சிலுவை படையினர் வரும் முன்னர் அனைத்தையும் எப்படி தயார் நிலையில் வைத்துகொள்வது என்பது குறித்தும் விவரிக்கிறார். வெறும் 2000 வீரர்களை மட்டுமே கொண்ட காயி கோத்திரம் அலெப்போ எல்லையில் குடியேறுவதைத் தடுக்க, மாஸ்டர் ஆஸம் காட்டும் ஆர்வம் நாசிரை ஆச்சரியப்படுத்துகிறது.

பாக்தாதின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த, யாரென்றே அறியாத சலாஹுத்தீன் அய்யூபி பின்னர் நூருத்தீன் சங்கியின் இராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்து தம் திறமையால் தளபதியாக உயர்ந்து இறுதியில் ஜெரூசலத்தைக் கைப்பற்றிய விவரத்தை எடுத்துக் கூறும் மாஸ்டர் ஆஸம், சிறு குழு தானே என நாம் பொருட்படுத்தாமல் விடுபவர்கள் பின்னர் நமக்குப் பெரும் பிரச்சனையாக மாறலாம். சொற்பமான வீரர்களை மட்டுமே கொண்டிருந்தாலும், ஜெரூசலம் செல்லும் பாதையில் காயி கோத்திரத்தினர் குடியேறுவதைத் தாம் விரும்பவில்லை எனவும் ஜெரூசலத்தைக் கைப்பற்ற வரும் சிலுவைப்படையினருக்கு அவர்கள் வரும் பாதையினை முழுமையாக எத்தடையும் இல்லாமல் தயாராக்கி வைப்பதே தம் லட்சியம் என்றும் தெளிவுபடுத்துகிறார்.

காயி கோத்திரத்திலுள்ள ஆடுகளில் நோய்த் தாக்கியுள்ள விவரத்தை மருத்துவர் அக்சகோசா, குண்டோக்டுவிடம் தெரிவிக்கிறார். நோய்த் தாக்கிய ஆடுகள் அனைத்தையும் தனியாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் அவற்றை முழுவதையும் அழித்து விட்டால், ஒருவேளை வரும் பேராபத்திலிருந்து கோத்திரத்தைப் பாதுகாக்க முடியலாம் என அவர் ஆலோசனை கூறுகிறார். இதனைக் கேட்டு பெரும் கவலைக்குள்ளாகும் குண்டோக்டு, யாருக்கும் தெரியாமல் அதனை முடித்துவிடும்படி தெரிவிக்கிறார். சுலைமான் ஷா அலெப்போவுக்குச் செல்ல இருக்கும் விசயத்தை குர்தோக்லுவிடம் கூறி எச்சரிக்கிறார் செல்சன்.

அலெப்போ சென்று அவரின் நோய்க்கான மருந்து பெற்று அவர் குணமடைந்து எழுந்துவிட்டால், எல்லா திட்டங்களும் பாழாகிவிடும் எனக் கூறும் அவள் அதற்கு முன்னரே சுலைமான் ஷாவைத் தீர்த்து கட்டிவிட்டால் தம் நோக்கமும் நிறைவேறிவிடும்; குர்தோக்லுவும் காயி கோத்திரத்தின் தலைவராகிவிடலாம் என ஆலோசனை கூறுகிறாள். அதற்கு வசதியாக, அன்றிரவு சுலைமான் ஷாவின் கூடாரத்திலிருந்து குண்டோக்டுவையும் அம்மா ஹைமாவையும் வெளியேற்றி சுலைமான் ஷாவைத் தனிமையில் ஆக்குவது தம் பொறுப்பு எனவும் மீதியைக் குர்தோக்லு கவனித்துக் கொள்ள வேண்டுமெனவும் திட்டமிட்டுக் கொடுக்கிறாள். புதிய சிலுவை யுத்தத்தைத் தொடங்குவதற்குப் போப்பைச் சம்மதிக்க வைக்க வேண்டுமெனவும் அதற்குத் தம்மிடமிருந்து திருட்டுப் போன அந்தப் புனிதச் சின்னங்களைக் கைப்பற்ற வேண்டுமெனவும் வாடிகனிலிருந்து வந்த மாஸ்டர் பெட்ரூசியோவின் நண்பர் கார்டினல் தோமஸ் கூறுகிறார். அப்புனிதச் சின்னங்கள் அடங்கிய பெட்டியை இப்னு அரபியிடமிருந்து கைப்பற்றி வர, பாதாள அறையில் அடைக்கப்பட்டுள்ள தம் சகோதரனாகிய எலனோராவின் தந்தையிடம் கேட்கிறார் பெட்ரூசியோ.

கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறிய இப்னு அரபியின் சீடராகிய அவரிடம், தமக்காக இந்த வேலையைச் செய்தால் மீண்டும் அவருடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதாக ஆசை காட்டுகிறார் பெட்ரூசியோ. திட்டமிட்டது போன்று, அன்றிரவு தமக்கு வலி ஏற்பட்டது போல் நடிக்கிறாள் செல்சன். அவள் கர்ப்பமாக இருப்பதாக நம்பும் குண்டோக்டுவும் கோக்சேவும் அம்மா ஹைமுக்குத் தகவல் தெரிவித்து வரவைக்கின்றனர். சுலைமான் ஷா கூடாரத்தில் தனியாக ஆகிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கு அவரைக் கொலை செய்ய நுழைகிறார் குர்தோக்லு. அவரைப் பார்த்துவிடுகிறார் சுலைமான் ஷா. அதே சமயம், தம் வலி பிரச்சனையில்லை எனவும் தம்மை அம்மா ஹைமா பார்த்து கொள்வார் எனவும் தந்தை சுலைமான் ஷா தனியாக இருப்பதால் உடனே அங்கே செல்லும்படியும் குண்டோக்டுவைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கிறாள் செல்சன்.

சுலைமான் ஷாவைக் குர்தோக்லுவைக் கொண்டு கொன்றுவிட்டு, அவரைக் கையும் களவுமாக சிக்க வைத்து தம் கணவன் குண்டோக்டுவைக் காயி கோத்திரத்தின் தலைவராக்குவதே செல்சனின் திட்டம். இது அறியாமல் சுலைமான் ஷாவைத் தலையணை கொண்டு மூச்சு திணற வைத்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் குர்தோக்லு!

இக்காட்சியுடன் இப்பாகம் நிறைவடைகிறது.


Share this News:

Leave a Reply