மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்துவதை ரத்து செய்யும் மனு – உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடிவு!

293
Supreme court of India
Supreme court of India

புதுடெல்லி (20 ஜன 2022): தேர்தலில் வாக்குச் சீட்டுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) பயன்படுத்தும் முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கிய மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலிக்கும்.

உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 61ஏ பிரிவு திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தாக்கல் செய்த எம்.எல்.சர்மா, தன் மீது சட்டத்தை திணிக்க அரசுக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார்.

கடந்த ஆண்டு இதே கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் இந்த மனுவை தாக்கல் செய்தார். EVM அடிப்படை உரிமையை மீறுவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.