பாஜகவிலிருந்து நீககப்பட்ட தலைவரை இணைப்பதால் காங்கிரஸில் பிளவு!

458

உத்தரகாண்ட் (18 ஜன 2022): உத்தரகாண்ட் மூத்த தலைவர் ஹரக் சிங் ராவத், பா.ஜ.வால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் காங்கிரஸில் மீண்டும் இணையவுள்ளார். இதனால் உத்தரகாண்ட் மாநில காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரசிலிருந்து விலகி பின்பு பாஜகவில் இணைந்த, முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் ஹரிஷ் ராவத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸின் மத்திய, மாநிலத் தலைமையின் ஒரு பிரிவினர் ராவத்தை இணைக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹரிஷ் ராவத், தனது கருத்தை மத்திய தலைமையிடம் தெரிவித்ததாகவும், ஆனால் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கருத்து வேறுபாடுகள் கட்சியின் எதிர்கால செயல்பாட்டை பாதிக்கலாம். ஹரக் சிங் ராவத்தை சேர்க்க மத்திய தலைமை வலியுறுத்தினால், அதைச் செய்ய வேண்டும் என்று ஹரிஷ் கூறியதாக சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹரிஷ் ராவத்துடன் நல்லுறவில் இல்லாத சிஎல்பி தலைவர் பிரீதம் சிங் மற்றும் ஏஐசிசி மாநில தலைவர் தேவேந்திர யாதவ் ஆகியோர் ஹரக் ராவத் காங்கிரசுக்கு திரும்புவதை வரவேற்றுள்ளனர். 2016ல் ஹரிஷ் ராவத் அரசைக் கவிழ்ப்பதில் ஹரக் சிங் ராவத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.