கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த ஒன்றிய அரசின் முரண்பட்ட தகவல்கள்!

Share this News:

புதுடெல்லி (17 ஜூன் 2021): ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனீகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில், சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பது தான் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனால் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே, 2-வது டோஸ் செலுத்துவது குறித்த குழப்பம் ஏற்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என ஒன்றிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளியை அதிகரிப்பது தொடர்பான முடிவு அறிவியல்பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் எடுக்கப்பட்டது என்று தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா விளக்கம் அளித்திருந்தார். மேலும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே இதில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

ஆனால், இந்த முடிவை எடுக்க ஒப்புக்கொண்டதாக அமைச்சர் கூறும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் இதை மறுத்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த மே மாதம், இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு இடையிலான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக இந்திய அரசு உயர்த்தி அறிவித்த பின்பு இது ஒன்றிய அரசிடம் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் எடுக்கப்பட்டுள்ள முடிவு என்ற விமர்சனங்களும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply