இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி!

331

புதுடெல்லி (02 அக் 2021): இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது

வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளர்த்தியது. ஆனால், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

தற்போது அமலில் உள்ள நடைமுறைப்படி இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் இந்தியர்கள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தால் இந்திய பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் அமலாக உள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டபோதும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்பட வேண்டும்.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட போதும் இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களாகவே கருத்தப்படுகின்றனர். கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக இந்தியா-இங்கிலாந்து இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லீம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக ஆலோசனை!

இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியில் எந்த சிக்கலும் இல்லை என்ற இங்கிலாந்து, தடுப்பூசி சான்றிதழில் தான் பிரச்சினை என்று கூறியது. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயும் கருத்துவேறுபாடு நிலவி வருகிறது.

இந்த விவகாரத்தில் இங்கிலாந்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் இந்தியர்கள் வரும் திங்கட்கிழமை முதல் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அரசின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் இங்கிலந்து நாட்டினர் அனைவரும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள போதும் தனிமைப்படுத்தலை சந்திக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்தியா வந்த உடன் இங்கிலாந்து பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் போது 8-வது நாளில் 2-வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அமல்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.