எனக்கு வேறு வழி தெரியவில்லை – ஹிஜாப் தடை உத்தரவால் சிக்கித்தவிக்கும் மாணவி!

உடுப்பி (17 மார்ச் 2022): வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அமல்படுத்தப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கல்வி நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளன. சில மாணவிகள் முக்காடுகளை அகற்றிவிட்டு வகுப்புகளுக்குச் செல்ல முன்வந்துள்ளனர்.

உடுப்பியில் உள்ள அரசு எம்ஜிஎம் கல்லூரியின் மாணவி ஒருவர், தனது முக்காடை அகற்றிவிட்டு வகுப்பறைக்குச் செல்ல முடிவு செய்தபோது வகுப்பறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்டிடிவியிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு வேறு வழியில்லை; எனக்கு என் கல்வி வேண்டும்; நான் ஹிஜாப் அணியாமல் எனது வகுப்புத் தோழிகளின் அருகில் அமர்ந்திருந்தபோது ​ஒரு இந்து மாணவி என்னிடம், ‘இப்போது நீ எங்களில் ஒருவர்’ என்று கூறியதாகத் தெரிவித்தார்.

அதேபோல கணினி அறிவியல் மாணவி சனா கவுசர், மூன்று வருடங்களாக தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வகுப்பில் கலந்து கொண்டுள்ளேன்; இனி அது நடக்காதா? என வேதனையுடன் தெரிவித்துள்ளார்

உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை, மாணவிகள் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு ஆசிரியர்கள் மாணவிகளின் ஹிஜாபைக் கழற்ற வேண்டும் என்று கோருகின்றனர் என்று சனா தெரிவித்துள்ளார்.

பல மாணவிகள் பள்ளி கல்லூரியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக சனா கூறினார். ‘இறுதியாண்டு வரை பயின்ற பல மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் பெற முடிவு செய்துள்ளனர்; பல மாணவர்கள் வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளனர்” என்றார் அவர்.

இதற்கிடையில், உடுப்பி அரசு பெண்கள் கல்லூரியின் துணைத் தலைவரும், பாஜக தலைவருமான யஷ்பால் சுவர்ணா, ஹிஜாபை கைவிட மறுத்த மாணவிகளுக்கு எதிராக கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அவர்கள் மாணவர்கள் அல்ல, அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பின் முகவர்கள். அவர்கள் இந்திய நீதித்துறையை மதிக்கவில்லை என்றால் இந்தியாவை விட்டு வெளியேறி, ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்ட இடத்தில் தங்கலாம்” என்று யஷ்பால் சுவர்ணா கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்: