குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் வலுவான செய்தி அளி்ப்போம் – தெலுங்கானா முதல்வர் அதிரடி!

626

ஐதராபாத் (08 மார்ச் 2020): நான் வீட்டில் பிறந்தவன். எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை. என் தந்தையின் சான்றிதழுக்கு நான் எங்கே செல்வேன்? என்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியனவற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் கொந்தளித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திர சேகரராவ், “நான் கிராமத்தில் எனது வீட்டில் பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை. கிராமத்து பெரியவர் ஒரு ‘ஜன்ம நாமா’ எழுதுவார். அதில் அதிகாரப்பூர்வ முத்திரை ஏதும் இடப்படாது” என்று 66 வயதான தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். “நான் பிறந்த போது, எங்களிடம் 580 ஏக்கர் நிலமும் ஒரு கட்டிடமும் இருந்தன. எனது பிறப்புச் சான்றிதழையே என்னால் தயாரிக்க முடியாதபோது, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் எவ்வாறு தங்கள் சான்றிதழ்களைத் தயாரிப்பார்கள்” என்றும் அவர் கேட்டார்.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

இந்தப் புதிய சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இது நாட்டு அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறினார். ”அரசியலமைப்பின் முதல் வாக்கியம் எந்த மதமும், சாதியும், மதமும் இல்லாமல் உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் விலக்கு என்று அவர்கள் சொன்னால், அது எங்களுக்கு ஏற்புடையதல்ல. நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். நாங்கள் மட்டுமல்ல, எந்த நாகரிக சமூகமும் அதை ஏற்றுக்கொள்ளாது” என்று CAA-வை எதிர்த்து அவர் கருத்து தெரிவித்தார்.

மாநில சட்டசபையில் CAA மற்றும் NPR குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும், நாடு முழுமைக்கும் வலுவானதொரு செய்தியை அனுப்ப எதிர்வரும் நாள்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.