தொலைபேசி எண்கள் கசிவு – முஸ்லிம் மாணவிகளுக்கு தொலைபேசி மிரட்டல்!

Share this News:

உடுப்பி (10 பிப் 2022): கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசுப் பெண்கள் கல்லூரியின் பல முஸ்லீம் மாணவிகளின் தொலைபேசி எண்கள், முகவரிகள், பெற்றோரின் தொடர்புகள் கசிந்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை முதல் மிரட்டல் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போராட்டங்களின் முகமாக இருக்கும் மாணவிகள் கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட அவர்களின் தனிப்பட்ட விவரங்களின் pdf வாட்ஸ்அப் மூலம் கசிந்ததால் மாணவிகள் அச்சத்தில் வாழ்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

17 வயதான அலியா அஸ்ஸாதி என்ற மாணவிக்கு நாள் முழுவதும் மிரட்டல் தொலைபேசி அழைப்புகளைப் வந்துள்ளன. பின்புதான் தனது எண் இணையத்தில் கசிந்ததை உணர்ந்துள்ளார்.

தங்களது தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்தது எப்படி என்பதை கல்லூரி நிர்வாகம் விளக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரும் நிலையில், தங்கள் பெற்றோருக்கும் மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களோ அல்லது பெற்றோரோ தாக்கப்படலாம் என்ற அச்சத்திலும் மாணவர்கள் உள்ளனர்.

இதற்கிடையே ஹிஜாப் விவகாரம் தொடர்பான விசாரணையில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கு தீர்ப்பு வரும்வரை கல்வி நிறுவனங்களுக்கு மத அடையாளங்களுடன் வருவதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply