74 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட சகோதரர்கள் – இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நெகிழ்ச்சி!

353

பஞ்சாப் (13 ஜன 2022): 74 வருட காத்திருப்புக்குப் பின் இறுதியாக கண்ணீருடன் இரு சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும் கட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் பைசலாபாத் பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தியாவின் பஞ்சாபில் வசிக்கும் முகமது ஹபீப் ஆகியோர் 74 வருட காத்திருப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர்.

முஹம்மது சித்திக் 1947 பிரிவினையின் போது சிறு குழந்தையாக இருந்தார். சித்திக் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு வந்தபோது, ​​அவரது மூத்த சகோதரர் ஹபீப் அவர்களுடன் வர முடியவில்லை. இரு நாடுகளும் இரண்டாகப் பிரிந்த பிறகு, இருவருக்கும் இடையே வேறு எந்த தொடர்பும் இல்லை.

இந்நிலையில் சமூக வலைதளத்தின் உதவியுடன் இரு தரப்பு குடும்பத்தினரும் சில நாட்களாக அறிமுகமாகிக் கொண்டனர்.  பின்னர், கர்தார்பூர் நடைபாதையில் சகோதரர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இரு குடும்பத்தினரும் அங்கு சந்தித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்சியைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இருவரும் எல்லையில் எதிரெதிரே வந்த போது இருவரும் கட்டுப்பாட்டை இழந்தனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதனர். கர்தார்பூர் வழித்தடத்தில் இதுபோன்ற வாய்ப்பை வழங்கிய இரு நாட்டு அரசுகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனை அடுத்து மீண்டும் சந்திப்பதாக உறுதியளித்து சித்தீக்கும், ஹபீபும் அவரவர் இடங்களுக்கு திரும்பினர். கர்தார்பூர் வழித்தடமானது 4 கிமீ நீளமுள்ள சீக்கிய புனிதப் பாதையாகும். பாக்கிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் குருநானக்கால் நிறுவப்பட்ட குருத்வாரா தர்பார் சாஹிப் மற்றும் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருதாஸ்பூரில் அமைந்துள்ள தேரா பாபா நானக் குருத்வாராவை இந்த நடைபாதை இணைக்கிறது.

இது இரு நாடுகளைச் சேர்ந்த சீக்கிய யாத்ரீகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் முடிவில், விசா இல்லாமல் இந்த வழித்தடத்தின் வழியாக ஒரு நாளைக்கு சுமார் 5,000 பேர் இரு நாடுகளின் புனித யாத்திரை தலங்களுக்குச் செல்ல முடியும்.