இந்துவாக மாறிய ஷியா வக்பு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி கைது!

648

ஹரித்வார் (14 ஜன 2022): இந்துவாக மாறி ஜிதேந்திர தியாகி என்று பெயர் மாற்றிக் கொண்ட வாசிம் ரிஸ்வி நேற்று ஹரித்வார் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார்.

உ.பி., ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி சமீபத்தில் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். மேலும் தனது பெயரை ஜிதேந்திர தியாகி என்று மாற்றிக்கொண்டார்.

அவருக்கு, உத்தரபிரதேசத்தில் உள்ள தஷ்னா கோவிலில் பூசாரியாக இருக்கும் நரசிம்மானந்த் தலைமையில் மதமாற்றம் நடந்தது. இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித யாத்திரை நகரான ஹரித்வாரில் டிசம்பர் 17 முதல் 19 வரை இந்துத்துவா மாநாடு நடைபெற்றது. இதற்கு நரசிம்மானந்த் தலைமை தாங்கினார்.

சிறுபான்மையினரைக் கொல்லவும், மத மையங்களைத் தாக்கவும், இந்தியாவை இந்து நாடாக மாற்றவும் மாநாட்டில் பேசிய தீவிரவாத இந்துத்துவா ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்ச்சையானது. இந்த சர்ச்சையை அடுத்து, ஹரித்வார் போலீசார், மத வெறுப்பை தூண்டியதாக வாசிம் ரிஸ்வி உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  விபச்சார விடுதியாக செயல்பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட்!

ரிஸ்வியைத் தவிர, யதி நரசிம்மானந்த், இந்து மகாசபா பொதுச் செயலாளர் அன்னபூர்ணா, சிந்து சாகர், தரம்தாஸ், பரமானந்தா, ஆனந்த் ஸ்வரூப், அஷ்வினி உபாத்யாய் மற்றும் சுரேஷ் சவான் ஆகியோர் மீது ஹரித்வாரில் உள்ள ஜ்வாலாப்பூர் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக நேற்று வசீம் ரிஸ்வி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே யதி நரசிம்மானந்த் உள்ளிட்டோருக்கும் உத்தரகாண்ட் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள யதி நரசிம்மானந்த், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், நானும் என் குழந்தைகளும் இறந்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.