தொழிலாளர்களை வதைத்த 436 நிறுவனங்கள் மீது கத்தார் அரசு நடவடிக்கை!

764

தோஹா (09 ஆக 2021): கத்தாரில் அரசின் உத்தரவை மீறிய ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள் மீது கத்தார் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வும் அளிக்கப் பட்டுள்ளது.

“வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை ஓய்வெடுக்க வேண்டும்” என்று கத்தார் அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த இந்த உத்தரவு, எதிர்வரும் செப்டம்பர் 15 வரை நீடிக்கும்.

இவ்வருடம் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, வழக்கத்தைவிட இந்த முறை கூடுதலாக இரண்டு மணிநேர ஓய்வு அனுமதிக்கப்பட்டது. ஆனால், பல நிறுவனங்கள் அரசின் இந்த அறிவிப்பை உதாசீனம் செய்தன.

மேலும் திருத்தப்பட்ட அரசின் பணி நேர அட்டவணையை தொழிலாளர்கள் அனைவரும் பார்க்கும் வகையில், பணியிடத்தில் வெளியிட வேண்டும் என்று அமைச்சகம் உத்தரவிட்டது.

கூடுதலாக, பணியாளர்கள் அனைவருக்கும் பணியிடத்தில் இலவச குடிநீர் வழங்குதல், வெப்பம் தொடர்பான சிரமங்களைக் குறைப்பதற்கான பயிற்சி, பணியிடங்களில் நிழல் அமைத்துக் கொடுத்தல் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்க ஆடை அல்லது சீருடைகளை வழங்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் அந்த அரசி உத்தரவில் குறிபிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல நிறுவனங்கள் இந்த உத்தரவை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முக்கியமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒப்பந்தம், கட்டுமானம் மற்றும் தோட்ட வேலைகளில் ஈடுபட்ட நிறுவனங்களாகும்.

முதல் கட்ட நடவடிக்கையாக, உத்தரவை மீறிய நிறுவனங்கள் மூன்று நாட்களுக்கு தமது பணிகளை நிறுத்தி வைக்கவும், தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுக்கவும் கத்தார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை 436 நிறுவனங்கள் அரசின் உத்தரவை மீறியதாக நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. தொழிலாளர்களை வதைத்த நிறுவனங்களின் மீதான தண்டனை பற்றிய வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.