கத்தாரில் கோவிட் 19 தடுப்பூசி போடப்படும் பணி டிசம்பர் 23 முதல் தொடக்கம்!

Share this News:

தோஹா (22 டிச 2020): கத்தாரில் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்டம் (புதன்கிழமை) நாளை தொடங்கும் என்று கத்தார் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகள் முதல் கட்டமாக, நாளை டிசம்பர் 23 துவங்கி ஜனவரி 31 வரை துரிதமாக போடப்படும்.

முதல் கட்ட தடுப்பூசிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் போடப்படுகிறது.

அல் வஜ்பா, லிபைப், அல் ருவைஸ், உம் ஸலால், ரவ்லத்துல் கைல், அல் துமாமா மற்றும் மைதர் ஆகிய சுகாதார மையங்களில் தடுப்பூசிகள் கிடைக்கும்.

கோவிட்-19 தடுப்பூசிகள் சர்வதேச மருந்து நிறுவனமான ஃபைசர் & பயோஎன்டெக் நிறுவனத்தால் கத்தாருக்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. கத்தாரின் சுகாதார அமைச்சகத்தினால் இந்த மருந்து அங்கீகரிக்கப் பட்டுள்ளது. மேலும், இத் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் உடனடி பயன் தரக்கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிகள்  நேற்று நள்ளிரவு கத்தாருக்கு வந்திறங்கியது.

கத்தாரில் வாழும், பணிபுரியும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படாது.

நீண்ட நாட்களாக ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளவர்கள், அவரவரது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பின்பே தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கத்தாரில் 100% அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி பெறவிருப்பதால் கத்தாரின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சுகாதார அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


Share this News:

Leave a Reply