குவைத்தில் அதிகரிக்கும் வெளிநாட்டவர்களின் தற்கொலைகள்!

1295

குவைத் (17 நவ 2021): குவைத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது.

டந்த பத்து மாதங்களில் நாட்டில் 120 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகள் ஏன் அதிகரித்து வருகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், குவைத்தில் 90 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு பத்து மாதங்களுக்குள் அது 120ஐ எட்டியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 12 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். குவைத் நாட்டவர்களும் பட்டியலில் உள்ளனர்.

அதேவேளை பல தற்கொலை முயற்சிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஷேக் ஜாபிர் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களைத் தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சிறப்பு கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இரண்டு குவைத் பிரஜைகள் உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை விகிதம் அதிகரித்து வருவதற்கான காரணத்தைக் கண்டறிய விரிவான ஆய்வு நடத்தி, அதற்கான தீர்வுப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மனித உரிமைகளுக்கான தேசிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கோவிட் காலத்தால் ஏற்பட்ட வேலை இழப்புகள், நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் ஆகியவை தற்கொலைகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.