இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத்தடை ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பு!

211

துபாய் (28 ஜுலை 2021): இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட் 7 வரை விமானங்களை இயக்கப்போவதில்லை என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எமிரேட்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோவிட் பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப முடியாமல் பலர் சிக்கித் தவிக்கின்றனர். இது இப்படியிருக்க, பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எமிரேட்ஸ் நிறுவனம் அளித்துள்ள பதிலில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்களை இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

அதேபோல பயணத் தடை எப்போது முடிவடையும்? என்றும், இந்த முடிவு அரசாங்கத்திடம் உள்ளது என்றும், மேலதிக அறிவிப்பு வரும் வரை விமானங்களை இயக்கப்போவதில்லை என்று ஐக்கிய அரபு அமீரக பொது சிவில் விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்தந்த நாடுகளில் கோவிட் நிலைமை கவனமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து மட்டங்களையும் ஆராய்ந்து மீண்டும் விமானங்களைத் தொடங்கலாமா? என்று முடிவு செய்யும் என்றும் ஐக்கிய அரபு அமீரக பொது சிவில் விமான ஆணையம் கூறியுள்ளது.

முன்னதாக, எத்திஹாத் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து விமான பயண தடையை ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது. தற்போது அது மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர் விசாக்கள் வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைவதற்கு தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.