அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் – ஜேபி நட்டா எடப்பாடி சந்திப்பு திடீர் ரத்து!

Share this News:

மதுரை (30 ஜன 2021): அதிமுக பாஜக கூட்டணியில் 62 தொகுதிகளை பாஜக கேட்டு அடம்பிடிப்பதால் அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டு கேட்டு அடம் பிடிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க , பாஜக 60 தொகுதிகள் கேட்டு தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது. இதற்கு அதிமுக தொடர்ந்து மறுத்து வருவதால் பாஜ தலைமை கடும் கோபத்தில் உள்ளது.

கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமித்ஷா பாஜகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பாஜக சார்பில் 100 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்கும் தொகுதியை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனை அதிமுக தரப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. 30 தொகுதிகளுக்கு மேல் ஒரு சீட்டும் வழங்கப்படாது என்பதில் அதிமுக பிடிவாதமாக இருந்தது. இதனால் அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.

இரண்டாம் கட்டமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பாஜ சார்பில் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை ஒதுக்கி தருகிறோம். எங்களுக்கு 60 சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதிலும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதற்கிடையே பாஜகவுக்கு 34 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் பாஜகவை தோல்வியடைய செய்யும் வகையில் இவ்வாறு தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக திமுக கூட்டணியில் , முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுவதாக அறியப்பட்டுள்ள தொகுதிகளை , பாஜகவுக்கு வழங்கும் வகையில் தொகுதிகளுக்கான பட்டியலை தேர்வு செய்யும் பணியில் அதிமுக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இந்த அதிரடி திட்டத்தை பார்த்து பாஜக கதிகலங்கி போய் உள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு மதுரை வந்தார். இரவு 10.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜ மாநில தலைவர் முருகன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மதுரை வந்துள்ளனர். இவர்கள், ஜோ.பி.நட்டாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கியம் காரணம் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அதிமுக சார்பில் தலைவர்கள் அறிவித்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வர தயார் என பாஜ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு இறுதியாகதாதால் அதிமுக பாஜக கூட்டணி குழப்பத்தில் உள்ளது.


Share this News:

Leave a Reply