கொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்!

277

வாணியம்பாடி (20 செப் 2020): கொரோனா பாதித்தும் கல்லூரி இறுதியாண்டு தேர்வை எழுதியுள்ளார் மாணவர் அனீசுர் ரஹ்மான்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்த அனீசூர் ரஹமான் என்ற மாணவர், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் இளங்கலை வணிகவியல் என்கிற பி.காம் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கொரோனா தொற்று பாதிக்கபட்டு, கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளப்படி பல்கலைகழகம் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தேர்வுகளை நடத்தியது. இந்த தேர்வை எழுத அனீசுர் ரஹ்மான், முன்வந்தார். இதற்காக மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி தலைமையில், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்துக்கொண்டு அந்த மாணவரை தேர்வு நடைபெற்ற மையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் ஆன்லைன் தேர்வில் கலந்துக்கொண்டு தேர்வு எழுதினார். தேர்வு முடியும் வரை மருத்துவ குழுவினர் அங்கிருந்தனர். தேர்வு முடிந்ததும் அவரை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.