மதுரையில் டெபாசிட் இழந்த திமுக!

554

மதுரை (22 பிப் 2022): மதுரையில் ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளரிடம் திமுக அதிமுக இரு கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 26 வார்டுகளில் திமுகவும், 7 வார்டுகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. மேலும் மதுரை 47வது வார்டில் அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேட்சையாக போட்டியிட்டார்.

இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர், 4,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகளா மற்றும் அதிமுக வேட்பாளர் ரூபினி ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.