புற்றுநோய்க்கு உதவி கேட்ட பாஜக பிரமுகர் – உடனே உதவுவதாக அறிவித்த திமுக எம்பி!

632

சென்னை (06 மார்ச் 2020): தனது உறவினரின் புற்று நோய் சிகிச்சைக்கு உதவி கேட்ட பாஜக பிரமுகருக்கு திமுக எம்பி செந்தில்குமார் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

பாஜக பிரமுகரும், ட்விட்டரில் அதிமுக எம்பி செந்தில்குமாருடன் கருத்துப் போரில் ஈடுபடுபவருமான எல்.ஜி.சூர்யா என்பவர் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். அதில், என் நண்பரின் அம்மாவிற்கு முஸினஸ் கார்சினோ வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவரின் பெயர் பிரேமலதா. பிரேமலதா அம்மா தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவை. அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள நிதி உதவி தேவை. அப்போது தான் அவரை காக்க முடியும். தயவு செய்து உதவுங்கள், என்று குறிப்பிட்டார். இந்த டிவிட்டை பார்த்த திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் ஓடோடி வந்தார். செந்தில் குமார் இதற்கு அளித்த பதிலில், சூர்யா, என்னால் உங்கள் நண்பரின் அம்மாவிற்கு நிதி பெற்றுத் தரமுடியும்.

பிரதமரின் தேசிய நிதி உதவி பணத்தில் இருந்து உங்களுக்கு பணம் பெற்றுத் தர முடியும். என்னிடம் விவரத்தை தெரிவியுங்கள். அனைத்து விதத்திலும் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் என்று செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட்டை பலரும் பாராட்டி வருகிறார்கள். செந்தில் குமார் அரசியல் வேறுபாடு கடந்து இப்படி உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதைப் படிச்சீங்களா?:  ஆவின் பால் - ஊடகங்கள் மூலம் பரவும் தவறான தகவல்கள்!

இதற்கு தற்போது எல்.ஜி.சூர்யா டிவிட்டரில் செந்தில் குமாரிடம் நன்றி தெரிவித்துள்ளார். உங்களையே தொடர்பு கொள்வேன், உங்களது மெயில் ஐடி கிடைக்குமா என்று கேட்டுள்ளார். இதற்கு தன்னுடைய மெயில் ஐடியை மெசேஜ் செய்து இருப்பதாக செந்தில் குமார் பதில் அளித்துள்ளார். இவர்களின் உரையாடல் இணையம் முழுக்க பெரிய வரவேற்ப்பை பெற்றது.

மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் இப்படித்தான் ஒன்றுசேர வேண்டும், கட்சி வேறுபாடு பார்க்காமல் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். இவர், ஆனா உங்க மனசு இருக்கு பாருங்க தோழர், நல்லா இருப்பீங்க தோழர், வேறு ஏதும் வார்த்தை இல்லை என்று பாராட்டி உள்ளார்.