ஜோதிகாவின் நிதியுதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை!

381

தஞ்சாவூர் (19 அக் 2020): நடிகை நிதியுதவியால் தஞ்சை அரசு மருத்துவமனை புத்துயிர் பெற்றுள்ளது.

நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.

நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை” என கூறினார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு இந்துத்வாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை சீரமைக்க தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை ஜோதிகா வழங்கி இருந்தார்.

இந்நிலையில், ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது. இதுகுறித்து புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் இரா.சரவணன், “எங்கள் படப்பிடிப்புக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. மனம் கசிந்தவராக தன்னால் முடிந்த உதவியைச் செய்து மருத்துவமனையை எப்படி மாற்றி இருக்கிறார் பாருங்கள்… அன்பில், அக்கறையில் வியக்க வைக்கும் எங்கள் மாதங்கி வாழ்க பல்லாண்டு” என பதிவிட்டுள்ளார்.