தடுமாறிய திருமாவளவன் தன்னிலை விளக்கம்!

716

சென்னை (02 அக் 2020): இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்,. இதற்கு இரங்கல் தெரிவித்த திருமாவளவன் அவரது பதிவில், “இந்து முன்னணி தலைவர் பெரியவர் இராம.கோபாலன் அவர்களின் மறைவுக்காக வருந்துகிறோம். இந்துக்களின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தவர். கருத்து முரண் இருந்தாலும் எம்மீது வெறுப்பைக் காட்டாதவர். அரசியல் கணக்குகளுக்காக அவதூறுகளைப் பரப்பாதவர்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது இரங்கல் பதிவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து தற்போது திருமா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்து முன்னணி நிறுவனர்- தலைவர் இராம.கோபாலன் அவர்களின் மறைவுக்கு நேற்று இரங்கல் தெரிவித்திருந்தேன். அது அரசியல்பயன் கருதி அல்ல! ஒரு இறப்பையொட்டி இரங்குவது மானுடஇயல்பு. அதிலும், பொதுவாழ்க்கையில் பின்பற்றப்படும் ஒரு நாகரிக மரபு. அவ்வளவே.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

காடுவெட்டி குரு மறைந்தபோதும் அப்படியே இரங்கல் தெரிவித்திருந்தேன். வாஜ்பாய், சுஷ்மாஸ்வராஜ் போன்ற தலைவர்களின் மறைவுக்கும் அதே அடிப்படையில்தான் புதுதில்லியில் அஞ்சலி செலுத்தினேன்.

பகைமுரணிலும் இரக்கம் மேலிடுவது மானுட நாகரிகத்தின் ஒரு பரிணாமம் என்றே நம்புகிறேன். எனினும், என்னுடைய பதிவு ‘எனக்கு நானே முரண்படும்’ பொருளை உணர்த்துவதாக அமைந்ததற்கு வருந்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.