ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவசாசன் ஆதரவு

245

சென்னை (20 ஜன 2022): அலங்கார ஊர்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வலம் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதேவேளை நிராகரிப்பு விவகாரத்தில் திமுக அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களான கப்பலோட்டிய தமிழர் வஉசி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்று கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எனினும், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், திமுகவின் முடிவை ஆதரித்து தமிழக பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வ.உ. சிதம்பரனார், வேலுநாச்சியார் போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும், அவர்களின் தேசியம், தெய்வீகம் தாங்கிய கருத்துகளையும் மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். தமிழகத்திலிருந்து இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களை நினைவுகூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு அலங்கார ஊர்தியை, தமிழக அரசு ஏற்பாடு செய்து, மாநிலம் முழுவதும் வலம் வரச் செய்ய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.