அரசின் உத்தரவை மீறும் மலேசிய மக்கள் – கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தொட்டது!

540

கோலாலம்பூர் (22 மார்ச் 2020): மலேசிய அரசின் பொது நடமாட்ட கட்டுப்பாடு நடவடிக்கைக்கு பொது மக்கள் சரிவர ஒத்துழைக்காத நிலையில் மலேசியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,030ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆகவும் அதிகரித்துள்ளது.

பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதும், மலேசியர்கள் பலர் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. பொதுமக்கள் பலர் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் இருந்ததை அடுத்து, நிலைமையைக் கண்காணிக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும் ராணுவத்தின் உதவி கோரப்படலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் படிச்சீங்களா?:  ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு!

இந்நிலையில் ராணுவத்தைக் களமிறக்குவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று முதல் மலேசிய முழுவதும் அந்நாட்டு ராணுவத்தினர் பொது நடமாட்ட கட்டுப்பாடு சரியாக அமல்படுத்தப் படுவதை உறுதி செய்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.