இலவச கல்வி – 20லட்சம் பேருக்கு வேலை – உ.பி தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அதிரடி!

Share this News:

லக்னோ (09 பிப் 2022): உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, விவசாய கடன் தள்ளுபடி, எல்கேஜி முதல் கல்லூரி வரை இலவச கல்வி, 20லட்சம் பேருக்கு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார்.

இன்று உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி தலைவர்கள் முன்னிலையில் பிரியங்கா காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. உ.பி. மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை (10ந்தேதி) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

இந்த நிலையில், உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று உ.பி. சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், விவசாயிகள், கொரோனா போர் வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 20லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

“சத்தீஸ்கரை போன்று, உ.பி.யில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஆட்சிக்கு வந்து 10 நாள்களில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம்.

நெல், கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500க்கும், கரும்பு குவிண்டாலுக்கு ரூ.400க்கும் கொள்முதல் செய்யப்படும்.

மாட்டின் சாணத்தை ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரசால் பெற்றுக் கொள்ளப்படும்

மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும்

கே.ஜி. முதல் முதுநிலைப் பட்டப் படிப்பு வரை பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்

தொற்றுநோய்க் காலத்தின் பாக்கிகள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.25000 வழங்கப்படும்.

நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை இலவச சிகிச்சை

வேலைவாய்ப்பில், காவல்துறை, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள ரூ.12 லட்சம் பணியிடங்கள் நிரப்பபடும்

20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்

கோதன் நியாய் யோஜனா, பள்ளி சமையல்காரர்களுக்கு ரூ.5000 சம்பளம்,

பெண் காவலர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் பணியிடங்கள்,

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பீடு,

அனுபவம் மற்றும் விதிகளின் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் சிக்ஷா மித்ராக்களை முறைப்படுத்துதல்,

2 லட்சம் ஆசிரியர்கள் காலியிடம் நிரப்பப்படும்.

பத்திரிகையாளர்கள் மீதான பொய் வழக்குகளும் வாபஸ் பெறப்படும்

உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply