முதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்!-மோடி மீது ராகுல் காட்டம்

272
Rahul and Modi
Rahul and Modi

புதுதில்லி (12 ஆக 2020):குப்பைகள் இல்லா தேசம் என்ற பிரதமரின் சுதந்திர தினத் திட்டத்தை விமர்சித்துள்ள ராகுல் காந்தி முதலில் பொய் குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi And Modi
Rahul Gandhi And Modi

இந்திய யூனியன் பிரதேசத்தின் 74-ஆவது சுதந்தர தினம் நெருங்கி வரும் வேளையில், தற்போதைய நெருக்கடியான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பான முறையில் சுதந்தர தினத்தைக் கொண்டாட மிக நேர்தியான வகையில் ஏற்பாடுகள் செய்ய அந்தந்த மாநிய அரசுகள் முயன்று வருகின்றன. இதற்கிடையே ‘குப்பைகள் இல்லாத தேசம்’ எனும் ஒரு வாரகால இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா தேசம் உருவாக உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை வலியுறுத்தி, பிரதமர் அலுவலகம் ‘கார்பேஜ் குயிட் இந்தியா’ எனும் தலைப்பில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் பதிலடியை ட்வீட் செய்துள்ளார். அதில், நாம் ஏன்,ஒரு அடி முன்னோக்கிச் சென்று நம் தேசத்தில் அதிகரித்துவரும் பொய்க் குப்பைகளைச் சுத்தம் செய்யக் கூடாது..? சீனப் படையெடுப்பின் உண்மைகளை நாட்டு மக்களுக்குச் சொல்லி; சத்தியாகிரகத்தைத் தொடங்குவாரா, பிரதமர்?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இதைப் படிச்சீங்களா?:  நீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா!

இதற்கு முந்தைய நாள் ராகுல் செய்திருந்த மற்றொரு ட்வீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிக்கை நீக்கப்பட்டிருந்தது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ‘எப்போதெல்லாம் தேசம் உணர்ச்சிவசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆவணங்கள் திடீரென்று மாயமாக, மறைந்து விடுகின்றன. மல்லையா, ரஃபேல், நீரவ் மோடி, மெகுல் சோக்சி மீதான வழக்குகளிலும் இதுதான் நடந்தது. இது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல. மோடி அரசாங்கம் செய்யும் ஜனநாயக விரோத பரிசோதனை இது’ என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில் சீனா-வின் அத்துமீறல் குறித்து சில விஷயங்களைக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக நேர்மையான ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டவுடன் தனது இணையப்பக்கத்திலிருந்து அந்த அறிக்கையை நீக்கியது பாதுகாப்புத்துறை அமைச்சகம்..! ராகுல் குறிப்பிட்ட அம்சங்களில் உண்மை இருப்பதையும் இந்த நீக்கம் உறுதி செய்வதாக அமைந்தது. இதுகுறித்து மேலும் தெரிவித்திருந்த ராகுல் அவர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி!’ என்றும் கிண்டலடித்திருந்தார்.

-இளவேனில்