மகாராஷ்டிர அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – ஷீரடி சாய்பாபா கோயிலை மூட முடிவு!

மும்பை (18 ஜன 2020): ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமதுநகா் மாவட்டத்தில் சாயிபாபா வாழ்ந்து மறைந்த இடமான ஷீரடியில் அவருக்குக் கோவில் இருக்கிறது. இங்குள்ள சாயிபாபாவின் திருவுருவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனா்.

சாயிபாபா, தன் வாழ்நாளில் பெரும்பாலான தனது காலத்தைக் கழித்தது ஷீரடியில்தான். அவா் எங்கு பிறந்தாா் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

பா்பனி மாவட்டம், பத்ரியில் என்ற இடத்தில்தான் பிறந்தாா் என்று பக்தா்களில் சிலா் நம்பி வருகின்றனா்.

இந்த நிலையில், சாயிபாபா அவதரித்த பத்ரியின் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்வதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சாயிபாபா பிறந்த இடம் எது? என்பது தொடா்பாக சா்ச்சை எழுந்துள்ளது.

சாயிபாபாவின் பிறந்த இடம் குறித்துத் திடீரென பரவி வரும் செய்திகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஷீரடி சாயிபாபா கோயிலை ஜனவரி 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலவரையறையின்றி மூடுவதாக சாயிபாபா சன்ஸ்தான் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கிராம மக்கள் ஒன்று கூடி சனிக்கிழமை மாலை ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் இதனால் ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: