முஸ்லிம்களுக்கு எதிரான சமூகவலைத்தள பதிவு – கர்நாடகாவில் வெடித்த வன்முறை!

ஹூப்பள்ளி (17 ஏப் 2022): கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட்ட நிலையில் இதற்கு எதிராக காவல்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி காவல்நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி பதிவிட்டதை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைதான அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் பழைய ஹூப்ளி காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல் நிலையம் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உட்பட 12 காவலர்கள் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கும்பலை அங்கிருந்து கலையச் செய்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதகாவும் ஹூப்ளி-தர்வாட் காவல்துறை கமிஷனர் லாபு ராம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, காயமடைந்த ஒரு காவல்துறை அதிகாரியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கமிஷனர் லாபு ராம் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: