பிரிக்கப்போவது அமமுக – ஜெயிக்கப்போவது திமுக!

Share this News:

சென்னை (24 மார்ச் 2021): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமமுக தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலும் கூட்டணி அமைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமானும் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.

பல முனை தாக்குதல் நடத்தப்படுவதால் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும், யார் வாக்குகளை யார் பிரிப்பார்கள், கட்சி சாராத பொது வாக்காளர்களின் வாக்குகளை இந்த முறை யார் அதிகளவில் பெறுவார்கள் என்ற கேள்விகளுக்கு அரசியல் விமர்சகர்கள் பதிலளித்து வருகின்றனர். பல்வேறு தரப்பினர் எடுக்கும் கருத்துக் கணிப்பிலிருந்தும் இதற்கான பதிலை அறிய முடிகிறது.

பத்தாண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் அக்கட்சி ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுக எதிர்ப்பு வாக்குகளை திமுக முழுமையாக பெறுவதை நகர்ப்புறங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தடுக்கும் எனக் கூறப்படுகிறது. பெரியளவில் தன் பக்கம் திருப்பாவிட்டாலும், ஓரிரு ஆயிரம் வாக்குகளும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய இடம் வகிக்கும்.

அதிமுகவின் வாக்கு வங்கி இந்த முறை அடி வாங்கும் என அடித்துச் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவின் பிடிக்குள் அதிமுக சிக்கியுள்ளதாக பாமர மக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் வழக்கமாக அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளில் பெரியளவில் இறங்கு முகம் இருக்கும். அத்துடன் அமமுக ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் என்கின்றனர்.

மேலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அமமுக கணிசமான வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்னியர் உள் ஒதுக்கீடு காரணமாக அதிமுகவில் உள்ள பிற சமூக மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியை அமமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்கிறார்கள். அதிமுகவை அமமுக பார்த்துக் கொண்டால், பாமகவுக்கு வட மாவட்டங்களில் தேமுதிக போட்டியாக அமையும்.

வட மாவட்டங்களில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே வெளியே வருவதால் பாமக தலைவர்கள் மீது வட மாவட்டங்களில் அதிருப்தி நிலவுகிறது. கொரோனா காலத்தில் மக்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவித்த போது அன்புமணி ராமதாஸ்கூட வெளியே வந்து மக்களை பார்க்கவில்லை என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால் பாமகவுக்கு இதற்கு முன் கிடைத்தவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை தேமுதிக இம்முறை பங்குபோடும் என்கிறார்கள்.

அதிமுக கூட்டணி வாக்குகளை அமமுகவும், தேமுதிகவும் பிரிக்கும் நிலையில் இது திமுகவுக்கு சாதகமாக முடியும் என்று கணக்கு காட்டுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். கருத்துக் கணிப்பு முடிவுகளும் இதையே கூறும் நிலையில் மக்கள் மனதில் சரியாக என்ன இருக்கிறது, அவர்கள் யாருக்கு எத்தனை இடங்கள் கொடுப்பார்கள் என்பது மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.


Share this News:

Leave a Reply