தமிழ்நாட்டு கவர்னருக்கு எதிரான கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பு!

Share this News:

சென்னை (15 ஜன 2023): தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார்.

தமிழக சட்டசபையில், அரசு தயாரித்த உரையில் சில குறிப்பிட்ட பகுதிகளை பேசும்போது கவர்னர் ஆர்.என்.ரவி அதில் உள்ள பலதை வாசிக்கவில்லை. மேலும் சில கருத்துகளை அவர் சொந்தமாகவும் பேசினார்.

கவர்னரின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் உரையாற்றி முடித்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து அவருக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார். அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது. இதனால் அதிருப்தி அடைந்த கவர்னர் ஆர்.என்.ரவி இடையில் எழுந்து சட்ட சபையை விட்டு வெளியேறினார்.

கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. “தமிழக நலனுக்கு எதிராக கவர்னர் நடந்து வருகிறார். அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் நடக்கிறார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே சட்டசபையை விட்டு வெளியேறி அவமதிப்பு செய்து இருக்கிறார்” என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினாா்கள்.

இந்தநிலையில் தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.கழக எம்.பி.க்கள் டெல்லியில் நேரில் சந்தித்து கொடுத்தார்கள். தமிழக கவர்னர் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், தமிழக அரசுடன் ஒருவகை அரசியல் கருத்தியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஆவன செய்வதாக அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி தமிழக முதல்-அமைச்சரின் அந்த கடிதத்தை நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். அதனுடன் சில குறிப்புகளை ஜனாதிபதி இணைத்து அனுப்பி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சென்னை திரும்பினார்.


Share this News:

Leave a Reply